முதலமைச்சர் அய்யா…! கிண்டல் செய்தாரா மத்திய அமைச்சர்…?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் பிரதிநிதியான முதலமைச்சர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்ததாக ஒரு சர்ச்சை உருவெடுத்துள்ளது.
தமிழகம் இதுவரை காணாத மிக அதிக கனமழையை சந்தித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முதலில் மழை,வெள்ளத்தில் சிக்குண்டன. பின்னர் குறுகிய கால இடைவெளியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் சேதத்தை சந்தித்தன.
மீட்பு பணிகள் நிறைவடைந்து, நிவாரணம், சுகாதார நடவடிக்கை என தமிழக அரசும், நிர்வாகமும் செய்து கொண்டிருக்க, நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு பேஷ், பேஷ் என்று கூறும் அளவுக்கு இல்லை என்கின்றனர் விவரத்தை நன்கு அறிந்தவர்கள்.
மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறை சொல்லி கொண்டிருக்கும் காட்சிகள் தான் நடக்கின்றன என்பது ஒரு தரப்பினர் கருத்தாக உள்ளது. அதில் லேட்டஸ்ட்டாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டி இருப்பதாக ஒரு புகைச்சல் தமிழகத்தில் இருந்து எதிரொலிக்க ஆரம்பித்து இருக்கிறது.
நீண்ட பேட்டியை அவர் அளித்து இருந்தாலும் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல் மொழிகள், பாவனைகள், கையசைப்புகள், வார்த்தை பிரவாகங்களில் ஒலித்த தொணி தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
அதிலும் செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் 12000 கோடி ரூபாய் நிவாரணம் கேட்க உள்ளதாக தெரிவித்ததை சுட்டிக்காட்டியும், மழை குறித்து உரிய முறையில் எச்சரிக்கை செய்யவில்லை என்று கூறியதையும் வினவி கருத்தை கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் தான் முதலமைச்சரை கிண்டல் செய்தாரோ? என்று எண்ண வைப்பதாக கூறுகின்றனர் அதை பார்த்தவர்கள்.
அந்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில், சென்டிமீட்டர் விவரம் தந்திருக்கணும், ஆஹா முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்போம் என்று சொல்ற அதே முதலமைச்சர், எங்கே இருந்தார்?
நிவாரண பணியை பார்க்காம டெல்லியில் இருந்தாரு, 3 நாள் கழிச்சு திருநெல்வேலியில் நின்னுக்கிட்டு, மரியாதை குடுத்து(இரு கரங்களையும் கை கூப்புகிறார்) கேட்டுக்கிறோம்.
இந்தியா கூட்டணி நிர்வாகிகள் என் மக்களை பார்த்துவிட்டு வர்றேன்னு சொல்லிட்டு அங்க இருக்கணும், அதில்லாமல் வாய்க்கு என்ன வந்துச்சு? 12000, 14000 கொடுன்னு (வாயருகே கைகளை வைத்து விரல்களை அசைக்கிறார்) கேட்கிறாரு என்று தொடர்ந்து பேசியபடியே தமது பதிலை முடிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அவரின் முழு பேட்டியை பார்த்த பலரும் ஒரு விஷயத்தை தெளிவாக வரையறுக்கின்றனர். மத்திய அரசின் மிக உயரிய பதவியில் உள்ள அவர், பேசும் தோரணை என்பது இந்த பேட்டியில் மாறுபட்டு இருப்பதை காண முடிகிறது, முதலமைச்சரின் டெல்லி விசிட், நிவாரண நிதிக்காக பிரதமரை சந்தித்தது ஆகியவற்றை குறிப்பிடும் போது செய்த சைகைகள் இதுவரை இல்லாதது என்றும் கூறுகின்றனர்.
மேலும் முதலமைச்சர் அய்யா என்று விளித்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை கண்ட அரசியல் நிபுணர்கள், தமிழக அரசு நிர்வாகத்தின் மீது மத்திய அரசு ஒட்டு மொத்த கோபத்துடன் உள்ளது என்பதை காட்டுகிறது என்கின்றனர்.
ஆனால் பேட்டியை பார்த்த திமுகவினரும், அதன் ஆதரவு கட்சிகளும், இதை தாங்கள் எதிர்பார்த்தது தான் என்றும், ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரை தமது உடல்மொழியால் கிண்டல் செய்தார் என்று கூற ஆரம்பித்துள்ளனர். இதே பேட்டியை இணையத்தில் ரிப்பீட்டாக போட்டு பார்க்கும் உ.பி.க்களும் ரகம், ரகமாக கருத்துகளை கண்ட மேனிக்கு பதிவு செய்து வருகின்றனர்.
கேபினட் மினிஸ்டர் பதவி என்பது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு ஈடான protocol உள்ளது. அப்படி இருக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த ஆவேசமான உடல்மொழி அவசியம் இல்லை என்று திமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆக மொத்தம்… இணையத்தில் 2ம் ஆளாக இன்றும் செம கருத்து கலாட்டாகவே இருக்கிறது எனலாம்…! அவர் பேசிய வீடியோ பதிவு இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.