ஒரு வாரம் ஆச்சு…? எப்படி இருக்கார் கேப்டன்?
சென்னை: நடிகர் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்து மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டு உள்ளது.
அண்மைக்காலமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் நடிகர் விஜயகாந்த். உடல்நலம் ஒத்துழைக்காததால் கட்சி பணிகளில் ஈடுபாடில்லாமல் இருப்பதால் தொண்டர்கள் தரப்பும் சோர்ந்து போயிருக்கிறது.
இந் நிலையில் கடந்த 18ம் தேதி விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். சில நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த தருணத்தில் இன்றோடு 7 நாட்கள் ஆகிறது.
இந் நிலையில் அவரது உடல்நிலை பற்றிய லேட்டஸ்ட் தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;
காய்ச்சலால் விஜயகாந்த் கடந்த18ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைத்து வருகிறார். உடல்நிலை சீராக இருக்கிறது.
அவரின் அனைத்து உடல் உறுப்புகளும் நன்றாக இயங்குகின்றன. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பின்னர் வீடு திரும்புவார், தமது வழக்கமான பணிகளை அவர் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயகாந்தின் உடல்நிலை சீராகி விட்டாலும், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவர் நன்றாகவே இருக்கிறார், ஓரிரு நாட்களில் வீட்டுக்கு திரும்புவார் என்று தொண்டர்கள் கூறி உள்ளனர்.