Sunday, May 04 11:48 am

Breaking News

Trending News :

no image

அதிமுகவின் அக்டோபர் 7…! காரணமான அந்த இருவர்…! குஷியில் ர.ர.க்கள்


சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட முக்கிய காரணமாக இருந்தது இருவர் என்ற தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.

அதிமுகவில் முன் எப்போதும் இல்லாத பரபரப்பு காட்சிகள் கடந்த 10 நாட்களாக அரங்கேறின. அதில் குறிப்பாக அக்டோபர் 7ம் தேதியன்று காலை 10 மணி அளவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அநேகமாக எல்லா ஊடகங்களும், உத்தேசமாக கூறியது போன்று 2021ம் ஆண்டு அதிமுக முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டு விட்டார்.

ஆனால், அதன் பின்னணியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த அரசியல் பரபரப்புகள் தொண்டர்களை டென்ஷன் ஏற்றியது என்று கூறலாம். காரணம், ஓபிஎஸ் கோபமும், ஆதங்கமும் அவரது செயல்பாட்டில் இருந்ததுதான். இந்த ஒரு வாரமும், இபிஎஸ், ஓபிஎ இடையேயான இடைவெளி அதிகரித்து கொண்டே போனது.

அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்த மறுநாள் ஆட்சியர்க கூட்டம், மருத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்ட துவக்க விழாவின் போது தலைமை செயலகத்தில் தமது அறையில் இருந்தும் விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்ளாதது என காட்சிகள் அரங்கேறின.

காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், இபிஎஸ் பேசிக் கொள்ளாமல் இருக்க.. அன்றைய தினமே கடும் ஆதங்கம் மற்றும் கோபத்துடன் தேனி புறப்பட்டார் ஓபிஎஸ் என்கின்றனர் அவரின் விவரம் அறிந்தவர்கள். நிலைமை இப்படி இருக்க, எப்படி ஓபிஎஸ் மனம் மாறினார் என்பதற்கு 2 பேரை கைகாட்டுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஒருவர் கேபி முனுசாமி, மற்றொருவர் எஸ்பி வேலுமணி. இந்த இருவரின் அயராத முயற்சி, அணுகுமுறை, பேச்சுகள், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக கணித்து, இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பாலமாக செயல்பட்டனர்.

ஓபிஎஸ்சின் மனநிலையை நன்கு அறிந்தவர் கேபி முனுசாமி. அதுபோன்று இபிஎஸ்சின் குறிப்பறிந்து, அவரது மனசாட்சியாகவே இருப்பவர் எஸ்பி வேலுமணி. இருவரும் பலமுறை மாறி, மாறி ஓபிஎஸ்சையும், இபிஎஸ்சையும் சந்தித்து தற்போதைய நிலைமையை விளக்கி கூறி உள்ளனர். இருவரும் ஓபிஎஸ்சை சந்தித்து, 2021ல் மீண்டும் நாம்தான் ஆட்சி அமைக்க போறோம், நீங்கள் வழிகாட்டுங்கள், மற்றவை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நம்மில் பிரிவு வந்து வேறு யாராவது உள்ளே நுழைந்துவிட வேண்டாம் என்று கூறி இருக்கின்றனர்.

கேபி முனுசாமி சசிகலாவை எதிர்க்கும் அளவுக்கு, தினகரனை எதிர்ப்பவர் எஸ்பி வேலுமணி. கட்சிக்குள் மற்றவர்கள் நுழைந்து, பெரும் சிக்கலை உண்டு பண்ணிவிடக்கூடாது என்று இருவரும் எடுத்துச் சொன்ன சில விஷயங்களை கேட்டு ஓபிஎஸ் சற்றே சமாதானமானார். அதிலும் குறிப்பாக ஓபிஎஸ்சை முழுமையாக சமாதானப்படுத்தியவர் என்றால் அது கேபி முனுசாமி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவில் உள்ளவர்களின் பட்டியலை பார்த்து சில கேள்விகளையும், திருத்தங்களையும் ஓபிஎஸ் கூற, அமைச்சர்கள் நாங்கள் இருக்கிறோம்,பணியை அனைவரும் சிறப்பாக செய்வோம் என்று ஓபிஎஸ்சிடம், எஸ்பி வேலுமணி கூற, அதன் பிறகே ஓகே சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ்.

பிறகு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவில் திருத்தங்கள், பெயர் சேர்ப்பு என அக்டோபர் 7ம் தேதி அதிகாலை வரை பட்டியல் குறித்த பேச்சுகள் தொடர, பிறகு இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியல் அமைப்பில் கண் உறங்காமல், தூதுவர்களாக சென்றது கேபி முனுசாமியும், எஸ்பி வேலுமணியும் தான் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

அக்டோபர் 7ம் தேதி அதிமுக முகாம் ஒட்டுமொத்தமாக எந்த சிக்கலும், பிரச்னைகளும் இன்றி காணப்பட கேபி முனுசாமியும், எஸ்பி வேலுமணியுமே காரணம் என்று அறிந்து ரத்தத்தின் ரத்தங்கள் சிலாகிக்கின்றனர். ஆக மொத்தத்தில்.. கட்சிக்குள் தொண்டர்களின் வேகம் கூடியிருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!!

Most Popular