94 தொகுதிகள்…1463 வேட்பாளர்கள்…! தலைவிதியை நிர்ணயிக்கும் பீகார் மக்கள்
பாட்னா: பீகார் சட்டசபைக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைகிறது. இதையடுத்து அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் அறிவித்தபடி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த 94 தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒட்டு மொத்தமாக 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய சகோதரர் தேஜ்பிரதாப் யாதவ், நடிகர் சத்ருகன் சின்கா மகன் லவ் சின்கா ஆகியோர் 2ம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள். நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முகக்கவசம், தனி மனித இடைவெளி, வாக்களிக்க வருபவர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை அளித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.