முதல்வர் ஸ்டாலின் பற்றி சீமான் சொன்ன 'வேற லெவல்' விஷயம்…!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்துக்கு இன்று சீமானும், இயக்குநர் பாரதிராஜாவும் வந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சில முக்கிய விஷயங்கள் பற்றி பேசி இருக்கின்றனர். மேலும் கொரோனா நிவாரண நிதியும் வழங்கி உள்ளனர்.
எதற்காக சந்தித்தோம் என்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் விரிவாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்படுகிறார். எழுவர் விடுதலை குறித்து அவரிடம் வலியுறுத்தினோம். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதாக கூறினார். எழுவர் விடுதலையில் உறுதியாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
பள்ளி தேர்வை சில காலம் நடத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறோம். மாணவர்கள் நலன் பற்றியும் விவாதித்தோம் என்று சீமான் தெரிவித்தார்.
திமுகவையும், ஸ்டாலினையும் பற்றியும் சீமான் பேசாத பேச்சு இல்லை. விவாதிக்காத விஷயம் இல்லை. ஆனால் தேர்தல் முடிந்து முதல் முறையாக அரியணையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி பாராட்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.