Sunday, May 04 12:10 pm

Breaking News

Trending News :

no image

தமிழ்நாடு 2 ஆக பிரிப்பா…? மத்திய அரசு 'பரபர' விளக்கம்…!


டெல்லி: தமிழகம் 2 ஆக பிரிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஒரு விஷயம் தமிழகத்தில் மட்டுமல்ல… தேசிய அளவிலும் பெரும் சர்ச்சையானது. அதாவது தமிழகம் 2 ஆக பிரிக்கப்படுகிறது, கொங்குநாடு என்ற ஒரு மாநிலம் உருவாகிறது என்று கூறப்பட்டது.

பெரும் விவாதமாக கொங்குநாடு என்ற விவாகாரத்தில் பாஜக உறுதியாக இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. பாஜகவுக்கு எதிரான தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஒன்று திரண்டு கொந்தளித்தன.

கொங்குநாடு என உருவாக்குவோம் என்று பாஜக போர்க்கொடி தூக்கியதால் விவகாரம் மேலும் பெரிதானது. திடீரென அதில் அந்தர்பல்டி அடித்த பாஜக ஒரு வார்த்தைக்காக குறிப்பிட்டது, உள்நோக்கமும் இல்லை என்று கூறியது.

மத்திய அமைச்சர் எல் முருகனும் அது ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் ஏதேனும் ஒரு தருணத்தில் கொங்கு நாடு என்ற முழக்கம் மீண்டும் உயிர்பெறும் என்ற சந்தேகம் பாஜக மீதும், மத்திய அரசின் மீதும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இருந்து கொண்டே இருந்தது.

இந் நிலையில் அனைத்து சந்தேகங்கள், சர்ச்சைகளுக்கு மத்திய அரசாங்கம் இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தமிழக எம்பிக்களான பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் மத்திய அரசுக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கேள்வி ஒன்றை எழுப்பினர்.

அவர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் விளக்கம் அளித்து உள்ளார். அவர் தமது விளக்கத்தில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இப்போதைக்கு இல்லை. தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும் பிரிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் மூலம் தமிழகம் 2 ஆக பிரிக்கப்படாது என்பது உறுதியாகி இருக்கிறது. ஆக மொத்தம், கொங்கு நாடு என்ற முழக்கம், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Most Popular