கச்சிதமாய் காய் நகர்த்திய சசிகலா…! மதுசூதனன் கொடுத்து அனுப்பிய பைல்..?
சென்னை: மருத்துவமனையில் இருக்கும் மதுசூதனனை சசிகலா சந்திக்க சென்ற காரணம் என்ன என்பது பற்றி பரபரப்பாக காரணங்களும், பின்னணிகளும் வெளியாகி வருகின்றன.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக தடுமாறி வருகிறது. திமுக தொடுக்க போகும் வழக்குகள், கட்சியின் முக்கிய மற்றும் முன்னணி நிர்வாகிகள் இரண்டு பிரிவாக பிரிந்து ஓபிஎஸ், இபிஎஸ் என இயங்குவது, ஒற்றை தலைமை இல்லாமல் போனது, சசிகலாவின் ஆடியோ அரசியல் என அதிமுக திக்கு முக்காடி வருகிறது.
டெல்லி சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பிரதமரை சந்தித்துவிட்டாலும், அமித்ஷாவுக்கு காத்திருந்து, காத்திருந்து சந்தித்துவிட்டு வந்துள்ளது, சீனியர்ஸ் இடையே வருத்தத்தை காட்டுவதாக உள்ளது.
இப்படி கட்சியின் நிலைமை எக்குதப்பாக இருக்க…. உடல்நிலை பாதிக்கப்பட்ட மதுசூதனன் மருத்துவமனையில் இருந்த தருணம் சசிகலா நேரிடையாக ஹாஸ்பிடலுக்கு பிரவேசமானார். அவரது இந்த என்ட்ரியையும், அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில் எங்கள் அதிமுக என்று குறிப்பிட்டதையும் அவ்வளவு சாதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ள வில்லை என்பதும் நன்றாகவே தெரிகிறது.
நிலைமைகள் இப்படி மாறி, மாறி வானிலை அறிக்கை போன்று இருந்தாலும் மதுசூதனனை பற்றி ஒரு தகவல் அப்படி, இப்படி என்றும் அதிமுக முகாமில் உலாவி வருகிறது. அதிமுக அவைத்தலைவர், கட்சியின் சீனியர், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி என்பதால் கட்சியில் உள்ள அனைவருக்கும் இன்றளவும் மதுசூதனன் என்றால் தனி மரியாதை இருக்கிறது.
அதனால் தான் மருத்துவமனை வந்தே நேரில் சசிகலா சந்தித்துவிட்டு போயிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக ஒரு முக்கிய பைல் ஒன்று சசிகலாவிடம் கொடுங்கள் என்று தமது குடும்பத்தாரிடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த அதி முக்கிய பைலும் சசிகலா கைவசம் பத்திரமாக, பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்பட்டதாம். அதன் பின்னர்தான் உடனடியாக மருத்துவமனைக்கே காரில் புறப்பட்டாராம் சசிகலா. அதுவும் கட்சி கொடியுடன் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் என்று எப்போதுமே சசிகலாவுக்கு என்று உச்சப்பட்ச செல்வாக்கு இருக்கிறதாம். ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றவர் சசிகலா என்றும் இப்போது மதுசூதனன் தரப்பில் இருந்தும் அனுப்பப்பட்ட பைலும் அப்படித்தான் என்கிற ரீதியில் தகவல்கள் திகில் கிளப்புகின்றன.
தற்போதுள்ள நெருக்கடியில் ஒற்றை தலைமை மிக அவசியம் என்பதால் அதிமுக முகாமில் எப்போது வேண்டுமானாலும் காட்சிகள் மாறலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!