கொரோனாவால் ‘அம்போ’வான ஐபிஎல்…! போட்டிகள் ரத்து என அறிவிப்பு
மும்பை: கொரோனா தொற்றின் காரணமாக எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டை விரும்பி பார்ப்பவர்களில் இந்தியர்கள் போன்ற ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தவடிவத்திலும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டாலும் வெறிகொண்டு பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது ஐபிஎல் சீசன் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் படு உற்சாகமாக போட்டிகளை கண்டுகளித்து வந்தனர். கொரோனா காலம் என்பதால் போட்டிகளை நேரில் கண்டுகளிக்காமல் டிவிக்களில் பார்த்து வந்தனர்.
இப்போது அதற்கும் வேட்டு வைத்திருக்கிறது கொரோனா. கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளின் வீரர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாக அணி நிர்வாகங்களும், பிசிசிஐயும் ஒட்டு மொத்தமாக ஷாக்காகி உள்ளனர். இது போதாது என்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் ஆகியோரையும் கொரோனா தொற்றி விட்டது.
கிட்டத்தட்ட பாதி போட்டிகளை நடத்தியாகி விட்டது.. இனி என்ன செய்யலாம் என்று கையை பிசைந்து கொண்டிருந்த பிசிசிஐ தொடக்கத்தில் பாக்கி போட்டிகளையும் நடத்திவிடலாம் என்று தீர்மானித்து இருந்தது. அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்தி விடலாம் என்று முடிவு எடுத்து இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை…. இப்போது ஒட்டு மொத்த போட்டிகளையும் ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா, புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் போதே பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எல்லாம் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் போட்டியை நடத்தியே தீருவது என்று பிசிசிஐ கூறி இருந்தது. இப்போது கொரோனா உள்ளே எட்டிபார்க்க, வேறு வழியின்றி போட்டிகளை ரத்து செய்து இருக்கிறது.