மீண்டும் ஊரடங்கு…? அமைச்சரின் டுவிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? இல்லையா என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மெல்ல, மெல்ல அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவி வருகிறது.
கொரோனா தொற்றுகள் வேகம் எடுத்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்றுகள் வேகமாக உயர்ந்து வருகிறது. தொற்றுகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
அதே நேரத்தில், கொரோனா வேகமாக பரவி வருகிறது, அவ்வளவு தான், மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட போகிறது என்று சமூக வலை தளங்களில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனால் சாதாரண மக்கள் மட்டுமல்லாது, தொழில்துறையினர் பெரும் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர்.
மீண்டும் ஊரடங்கு என்றால் என்ன செய்வது? என்று அனைத்து தரப்பினரும் குழம்பி வரும் நிலையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையில்லை. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறி உள்ளார்.