ஊட்டிக்கு யாரும் போகாதீங்க…! 17வது நாளாக இப்படித்தான் இருக்குது…!
உதகை: கிட்டத்தட்ட 17 நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளதன் காரணமாக நீலகிரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் எந்நேரமும் மழை பெய்த வண்ணம் உள்ளது.
கோவையை காட்டியலும் நீலகிரியில் மழை தீவிரம் அடைந்துள்ளது. உதகை, கூடலூர், குந்தா உள்ளிட்ட பல பகுதிகளில் 17 நாட்களை கடந்தும் மழை நின்றபாடில்லை. கூடலூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்க, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வழக்கத்தை விட 145 சதவீதம் மழை இம்முறை பதிவாகி உள்ளதாக வானிலை மையத்தினர் கூறி உள்ளனர். மழையால் வீடுகள் இடிந்து, பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கத்துக்கு மாறாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இடைவிடாத மழை,நிலச்சரிவு, போக்குவரத்து முடக்கம் என பல்வேறு இன்னல்களின் காரணமாக மக்கள் ஒரு பக்கம் இருந்து வேறு பக்கம் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
கோவை, நீலகிரியில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கூடுதல் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.