முக்கிய அமைச்சர் கட்சி பதவி காலியாகிறதா…? திமுகவில் நடப்பது என்ன..?
சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்சி பதவிக்கு வேறு ஒரு நபரை நியமிக்கலாமா என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில் பெரும் குற்றச்சாட்டுகளில் ஆட்சி தலைமை சிக்கவில்லை. முழுக்க, முழுக்க கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தான் முக்கிய பணி என்று அரசு இயந்திரத்தையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் முடுக்கிவிட்டு உள்ளார்.
அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் மாவட்டம்தோறும் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து வரும் அதே தருணத்தில் மிகவும் சரியானவர்களை தான் அமைச்சர் பொறுப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்த்தி இருக்கிறார் என்பது மக்களின் எண்ணங்களாக உள்ளது.
அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியனை சொல்லலாம். அவருக்கு அடுத்தபடி அமைச்சரவையில் அனைவரையும் உற்று பார்க்க வைப்பவர், வைத்து கொண்டிருப்பவர் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
மெத்த படித்தவர், மொழிப்புலமை மற்றும் ஆளுமைகளில் சிறந்து விளங்குபவர். அவரின் தெளிவான நாகரிகமான பேச்சுகளே அதற்கு உதாரணம். சர்வதேச நாடுகளில் புகழ்பெற்ற வங்கிகளில் பணியாற்றிய சிறந்த அனுபவம் கொண்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தொடரில் அவரது பேச்சு, அவர் எழுப்பிய கேள்விகளே அவரின் ஆளுமையையும், திறமையையும் காட்டுவதாக உள்ளது. ஊடகங்களிலும் மிக சிறப்பாக விவாதங்களில் கலந்து கொண்டு அரசின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதில் வல்லவராக திகழ்கிறார்.
கோட்டையில் அவரது செயல்பாடுகளும் மெச்சத்தகந்ததாக உள்ளதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய கருத்துகளே பிடிஆருக்கு எதிராக திரும்பியதாகவும், ஸ்டாலின் அழைத்து கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்று திமுக முன்னணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். முழுக்க, முழுக்க நிதித்துறையை மேம்படுத்த தமிழக அரசை கடனில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இறங்கி உள்ளார். அவரின் கவனம் எல்லாம் அதிலேயே இருப்பதால் கட்சியின் ஐடி விங் பணியில் தம்மை ஆட்படுத்த முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவின் ஐடி விங்கை பக்காவாக வழி நடத்தியவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நிதி அமைச்சராக முழு நேரமும் ஈடுபட்டு வருவதால் ஐடி விங்கில் இருந்து அவரது சுமையை குறைத்துவிடலாமா என்று ஸ்டாலின் சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை கூட்டத்தொடரும் விரைவில் கூட இருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் படு பிசியாக இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருவதாக தெரிகிறது. எனவே திமுக ஐடி விங்க் பணியில் இருந்து முழுமையாக பிடிஆரை விலக்கி, அமைச்சர் பொறுப்பில் அவரது கவனத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாமா என்று கட்சி தலைமை திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
எனவே விரைவில் திமுக ஐடி விங்க் பணிக்கு வேறு ஒரு நிர்வாகியை பணி அமர்த்தலாமா என்றும் பேசப்பட்டு வருவதாக அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முழுக்க, முழுக்க தமிழகத்தின் நிதிச்சுமையை குறைக்கும் பணியில் சிறப்பாக செயல்படுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.