பள்ளித்தேர்வுகள் ரத்தா…? மாணவர்களுக்கு அமைச்சர் சர்ப்ரைஸ்
சென்னை: எந்த சூழ்நிலையிலும் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.
ஒரு பக்கம் வெயில், மறு பக்கம் காய்ச்சல் என பள்ளி மாணவர்கள் படும்பாடு வேறு ரகம். பரிட்சை நேரம், பாடம் படிக்கணும் என்று கர்ம சிரத்தையாக இருக்கும் மாணவர்களை தமிழகம் எங்கும் பரவி வரும் காய்ச்சல் பெரும் பயமுறுத்தலை உண்டு பண்ணி இருக்கிறது.
காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது தேர்வு நடக்கும் வேளையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதை எழுதாமல் இருக்கும் விவரமும் வெளியாகி இருக்கிறது.
காய்ச்சல், அதோடு கடுமையான வெப்பம் என மாணவர்கள் அவஸ்தை பட்டு வருகின்றனர். கத்தரி வெயிலுக்கு முன்பே காலநிலை மாணவர்களை உண்டு, இல்லை என்ற நிலையில் இந்த வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.
ஆகையால் காய்ச்சல், அதீத வெப்பம் ஆகியவற்றை முன் வைத்து 1 முதல் 9 வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு முன்பே தேர்வு நடத்தப்படும் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. அதே நேரத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்றும், இல்லை புதுச்சேரியை போல் தற்காலிகமாக 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இந்த தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளதாவது:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையோ அல்லது தேர்வுகள் ரத்து, முன்கூட்டியே நடத்தப்படும் என்ற அவசியம் இப்போது எழவில்லை. எனவே மாணவர்கள் தொடர்ந்து தங்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.