நைட் முழுவதும் மீட்டிங்… அப்பவும் வெளியாகாத வேட்பாளர் பட்டியல்..! திணறும் பாஜக
டெல்லி: 20 பேர் கொண்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடியாமல் பாஜக இன்னமும் திணறி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டன. தமக்கான தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சார களத்தில் குதித்துவிட்டன.
ஆனால் குறைந்த தொகுதிகளை பெற்றுவிட்ட தேசிய கட்சிகளாக காங்கிரசும், பாஜகவும் வேட்பாளர்களை அறிவிப்பில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அப்படி, இப்படி என்று நேற்றிரவு 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு விட்டது. பாஜகவோ இன்னமும் பட்டியலை இறுதி செய்யாமல் தடுமாறி வருகிறது.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன், தமிழக பாஜக தலைவர் முருகன் வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்றார். நேற்றிரவு ஆரம்பித்த கூட்டம், விடிய, விடிய நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் வேட்பாளர்கள் தேர்வில் கடும் சிக்கலும், குழப்பமும் நீடித்ததாக கூறப்படுகிறது.
கடைசியில் ஒரு வழியாக வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று அல்லது நாளை இந்த பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.