நேற்று கடிதம்… இன்று போன்…! தமிழகத்துக்காக படு ஸ்பீடில் மத்திய அரசு…!
டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்த நிலையில் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக இன்று மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நினைத்து பார்க்க முடியாத உச்சத்தில் இருக்கிறது. நேற்றும், இன்றும் தினசரி பாதிப்பு என்பது 25 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனாவின் தீவிரம் குறையவில்லை.
இந்த தருணத்தில் தான் மத்திய அரசுக்கு முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ள ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது தான் அந்த கடிதத்தின் சாராம்சம்.
ஆனால், கடிதம் எழுதிய மறுநாளான இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா தொற்று அதிகம் மாநில முதல்வர்களிடம் பேசிய வகையில் தான் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் உரையாடி இருக்கிறார்.
அப்போது கொரோனா நிலவரம் குறித்து, அதற்கு மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து ஆக்சிஜன் ஒதுக்கீடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு 220 டன்னாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த ஆக்சிஜன் அளவை 419 ஆக உயர்த்தி, அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது.
நேற்று கடிதம் எழுதினார்… மறுநாளான இன்று தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்துக்காக மத்திய அரசு படு ஸ்பீடில் நடவடிக்கை எடுப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக தமிழகத்துக்கு தாமதமின்றி கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று 2 வாரங்களுக்கு முன்பு பிரதமருக்கு திமுக தலைவராக ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதேபோன்று, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழுமையான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைகளின் மீதான மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்று கூறலாம். இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று மார்ச் மாதமும், ஜனவரியில் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கும் ஸ்டாலின் கொண்டு சென்றார். இனியும் பிரதமர் தாமதிக்காமல் விவசாயிகளை நேரடியாக அழைத்து பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 3 மாதங்களில் மத்திய அரசிடம் திமுக வைத்த கோரிக்கைகளும், அதன் மீதான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டும் அரசியல் வல்லுநர்கள், முதல்வராக அரியணையில் இருக்கும் போது ஸ்டாலின் கடிதம் எழுதிய மறுநாள் மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆக மொத்தத்தில் தமிழகம் சொல்வதை அல்லது தமிழகம் கேட்பதை மத்திய அரசு தடையின்றி கொடுப்பது மகிழ்ச்சியான என்றும், இது ஆரோக்கியமான அணுகுமுறையே என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.