Sunday, May 04 11:46 am

Breaking News

Trending News :

no image

கொங்குநாடு முழக்கம்..! பாஜகவின் ‘யூ டர்ன்’… பரபர பின்னணி தகவல்கள்


சென்னை: கொங்குநாடு என்ற முழக்கத்தில் இருந்து பாஜக பின்வாங்கி இருப்பது குறித்து பரபர பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2 வார காலமாக தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்த கொங்குநாடு முழக்கத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பாஜக. தமது பயோ டேட்டாவில் தட்டச்சு பிழையின் (clerical mistake) காரணமாக அந்த வார்த்தை இடம்பெற்று இருப்பதாக மத்திய அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசியலில் தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்கு வித்திட்ட இந்த விவகாரம் எப்படி முடிந்து போனது என்பது பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய அரசு தரப்பில் இருந்து கொங்கு நாடு என்ற வார்த்தை உருவாக காரணமே திமுக அரசின் ஒன்றியம் என்ற வார்த்தை தான். ஒன்றியம் என்ற திமுகவின் தொடர்  முழக்கமே மத்திய அரசின் கோபத்தை அதிகரிக்க அதன் பின்னணி தான் கொங்குநாடு என்பது.

தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் எப்படியாவது பாஜகவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது டெல்லி தலைமையின் உத்தரவு என்றும் அதன் முதல் காய் நகர்த்தல் தான் கொங்குநாடு என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறி உள்ளனர்.

அதிவேகமாக நகர்த்தப்பட்ட இந்த கொங்குநாடு முழக்கம் பட்டென்று ஆப் செய்யப்பட்டதன் பின்னணியில் பல சுவாரசியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் கொங்கு நாடு என்றவுடன் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே எல். முருகன் பயோ டேட்டாவில் அந்த வார்த்தை சேர்க்கப்பட்டதாகவும், அதன் பின்னால் எழுந்த எதிர்ப்புகள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது… திமுக, அதிமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கொங்குநாட்டுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் விவரம் மத்திய பாஜக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டதாம்.

இன்னும் சொல்ல போனால் கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்ற எதிர்ப்பு வாசகம் பற்றியும் டெல்லி தலைமையில் விவாதிக்கப்பட்டதாம். இது தவிர, கொங்குநாடு என்று பாஜக அடையாளப்படுத்தும் 10 மாவட்டங்களில் சாதிய மோதல்கள் அதிகம்.

கொங்கு நாடு என்ற முழக்கத்தை படு ஆழமாக முன் வைத்து சென்றால், ஒரு குறிப்பிட்ட சாதியின் நிழல் கட்சி என்ற முத்திரை படிந்துவிடும் என்றும் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டதாம். மேலும், அரசியல் செய்ய எந்த விஷயமும் இல்லாமல் தவித்து வரும் அதிமுகவுக்கு பாஜகவே பாயிண்ட் எடுத்து கொடுத்தது போன்று உள்ளது என்றும் கூறப்பட்டதாம்.

கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற மண்டலங்களில் தொகுதிகளை அள்ளிய திமுக, கொங்கு மண்டலத்தில் சறுக்கோ, சறுக்கு என்று சறுக்கி இருக்கிறது.

தமது இருப்பிடத்தை வலுவாக்கி கொள்ள அதிமுகவுக்கும், மத்திய அரசுக்கு எதிராக இன்னமும் வலுவாக குரல் கொடுக்க திமுகவுக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறதாம்.

வேறு ஒரு முக்கிய விஷயத்தையும் விவரம் அறிந்தவர்கள் குறிப்பிட்டு காட்டுகிறார்கள். கொங்குநாடு என்ற முழக்கம் வெளியுலகில் ஒலிக்கப்பட்டதுமே… கொங்குநாட்டு மக்களின் எண்ண ஓட்டம் பற்றி பல்ஸ் பார்க்கப்பட்டதாம். அதில் பாஜகவுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது தெரிய வந்ததாம்.

நடுநிலை மக்களின் பல்ஸ் எப்படி இருக்கிறது என்றும் சூட்டோடு சூடாக ஆராயப்பட்டதாம். இதுதவிர, அப்பகுதியில் உள்ள மூத்த, நடுநிலையான, கட்சி சார்பற்ற பத்திரிகையாளர்களிடம் மக்களின் மனோநிலை பற்றி கேட்கப்பட்டதாம்.

கொங்குநாடு என்பதற்கு எதிராக ஆழமாக பதிவாகி இருக்கிறது என்ற மக்களின் மனோநிலை சுட்டிக்காட்டப்பட்டதாம். பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கொங்கு மண்டலத்தில் உள்ள நல்ல பேரையும் வெகுவாக பாதித்துவிடும் என்றும் எடுத்துக் கூறப்பட்டதாம்.

அனைத்து கருத்துகளும் பாஜக எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் கொண்டு போய் சேர்ப்பதை கட்சி மேலிடம் உணர்ந்து கொங்குநாடு என்ற முழக்கத்தை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூன் 8ம் தேதி மத்திய அமைச்சர் எல். முருகன் பயோ டேட்டாவில் குறிப்பிடப்பட்டிருந்த கொங்குநாடு வார்த்தை குறித்து அவரின் விளக்கமும், (கொங்குநாடு என்ற வார்த்தை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது, அதில் தவறில்லை என்று கூறியிருந்தார்) இன்றைக்கு  அவர் அளித்த விளக்கத்துக்கும் உள்ள வித்தியாசமே இதற்கு சாட்சி என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தம் கொங்குநாடு என்ற முழக்கம், பாஜகவால் கைவிடப்பட்டு உள்ளது நிஜம் என்கின்றனர் அனைத்தும் அறிந்தவர்கள்…!

Most Popular