Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

ஹெச். ராஜாவும்… ரூ. 4 கோடியும்..! பாஜக விசாரணை நடத்துமா..?


சென்னை: ஹெச். ராஜா மீதான 4 கோடி ரூபாய் விவகாரத்தை கட்சி பார்த்து கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெளிவுபடுத்தி உள்ளார்.

தமிழகத்தில் மட்டுமல்ல…. தேசிய அளவிலும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா. பல்வேறு தருணங்களில் ஏராளமான குற்றச்சாட்டுகளிலும், சிக்கல்களிலும் சிக்கியவர். என்ன ஆனாலும் தமது மனதில் பட்டதை பளிச் என்று சொல்லிவிடுவார்.

அவர் மீது வேறொரு குற்றச்சாட்டு இப்போது தமிழக பாஜக மட்டத்திலும், டெல்லி தலைமை மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஹெச் ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

தம்மை கட்சி நிர்வாகிகள் வேண்டும் என்றே தோற்கடித்தனர் என்று கூறி அவர்களை பற்றி கட்சி மேலிடத்துக்கு ஹெச் ராஜா புகார் பட்டியல் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது. அவரின் புகாரை பற்றி அறிந்த காரைக்குடி பாஜக நிர்வாகிகள் பலரும் கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

அதாவது… கட்சியின் மாவட்ட கமிட்டி கலைந்தது. இது தமிழக பாஜக மட்டத்தில் ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது பிரச்னை முடிந்ததா என்றால் இல்லை… விஸ்வரூபம் எடுத்துவிட்டதாக தெரிகிறது. அதற்கு காரணம் ராஜினாமா செய்த காரைக்குடி நகர தலைவர் சந்திரன் போட்டு உடைத்த ஒரு விஷயம் தான்…

சட்டசபை தேர்தல் நேரத்தில் தலைமையிடம் இருந்து பெரும் தொகை ஒன்று தரப்பட்டது. அந்த தொகையானது பூத் கமிட்டிக்கு கூட ஹெச் ராஜா செலவு செய்யவில்லை. அனைத்து பணத்தையும் எடுத்து கொண்டு சுப்ரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா கட்டி வருகிறார். எருமைப்பட்டியில் உள்ள 40 ஏக்கர் தோட்டத்தில் பண்ணை வீடு கட்டி வருகிறார் என்று சரமாரியாக கூறி பாஜக மட்டுமல்ல மற்ற கட்சியினரையும் அதிர வைத்தார். கட்சி தலைமை ஹெச் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

விஷயம் இன்னும் அடங்காத பட்சத்தில், பாஜக தமிழக தலைவர் எல். முருகன் ஹெச் ராஜா விவகாரத்துக்கு பதில் அளித்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வந்த அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எல். முருகன் கூறியதாவது: தேர்தலுக்காக 4 கோடி ரூபாய் கொடுத்திருந்தால் தானே அதுபற்றி கூறமுடியும்? ஹெச் ராஜா விவகாரம் உட்கட்சி விவகாரம்… கட்சி பார்த்துக் கொள்ளும். வேட்பாளர்களுக்கு கட்சி பணம் தரவில்லை என்று கூறி சென்றார்.

Most Popular