ரவுடி, திருடன்.. எப்படிங்க…? ஓபிஎஸ்சை உண்டு இல்லை என்று பண்ணிய ஈபிஎஸ்
சென்னை: ரவுடிகளுடன் கட்சி அலுவலகத்தை சூறையாடி சேதப்படுத்தியவர் ஓபிஎஸ் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக குற்றம்சாட்டி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ஈபிஎஸ் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் கொண்டாட்டமாக மாறியது. இதையடுத்து இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த இணைப்பை ஈபிஎஸ் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
ஓபிஎஸ் அழைப்பை எப்படி ஏற்க முடியும்? ரவுடிகளுடன் கட்சி அலுவலகத்தில் புகுந்து உடைத்து ஆவணங்களை கொண்டு சென்றவர். கட்சி அலுவலகத்தை சூறையாடியவர்களுடன் இணைவதா? கட்சி அலுவலகத்தை உடைத்தவர்களில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். மற்றொருவருக்கு 2 கால்களும் உடைந்து போய்விட்டது. இதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆத்மா தான் காரணம்.
உங்களுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றால் பொதுக்குழுவுக்கு வர வேண்டியது தானே. அங்கே வராமல் கோர்ட்டுக்கு போனவர். அநாகரிகமாக நடந்து கொண்ட ஓபிஎஸ்சுடன் எப்படி இணைய முடியும்.
தொடர்ந்து அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டு கொண்டே வந்தால் மக்கள் எப்படி அதிமுகவை ஏற்றுக் கொள்வார்கள்? சட்ட விரோத நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. நான் இல்லை என்றால் கட்சிக்கு வேறு ஒரு தலைவர் வருவார் என்று கூறி உள்ளார்.