மாற்றப்படுகிறாரா இறையன்பு…? கோட்டையில் உலா வரும் புது தகவல்
சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு மாற்றப்பட உள்ளார் என்ற ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் கசிந்து வருகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த பின்னர், அதிகாரிகள் பக்கம் பார்வை திரும்பியது. எந்த பதவியில் எந்த அதிகாரி வரபோகிறார்? யாருக்கு புதிய தலைமை செயலாளர் பதவி என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் எழுந்தன.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளராக இருந்த இறையன்புவை தலைமை செயலாளராக அமர்த்தி ஆச்சரியம் காட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றது.
இறையன்புவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் விரைவில் அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்படுகிறார் என்ற தகவல் கோட்டை வட்டாரத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது. இது பற்றி வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு இறையன்பு மாற்றப்படலாம் என தலைமை செயலக வட்டாரஙகளில் உள்ள விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கடந்தாண்டு நவம்பருடன் தகவல் ஆணையராக இருந்த ராஜகோபால் ஐஏஎஸ் பதவிக்காலம் முடிந்தது. பின்னர் 2 மாதங்கள் கடந்தும் அந்த பதவிக்கு யாரும் நிரப்பப்படவில்லை.
தொடர்ந்து ஆணையர் பதவி காலியாக இருப்பதால் உரிய தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறமுடிவது இல்லை என்று பலரும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த பதவிக்கு உரிய நபரை நியமிக்க, நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டு அதற்கு இருமுறை நீட்டிப்பும் வழங்கப்பட்டது. ஆனாலும், யாரும் தலைமை தகவல் ஆணையராக அறிவிக்கப்படவில்லை. அவருக்கு கீழ் தகவல் ஆணையர்களாக யாரும் நிரப்பப்படவில்லை.
இந் நிலையில் தான் இறையன்புவை அந்த பதவிக்கு நியமிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கான காரணத்தையும் பட்டியலிடுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்…கடந்த 5 தலைமை தகவல் ஆணையாளர்களில் 4 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள். ஆகையால் தமது நம்பிக்கைக்கு உரிய இறையன்புவை தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுகள் நியமித்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்திருப்பதாக கூறுகின்றனர்.
அப்படியே இறையன்பு மாற்றப்பட்டாலும், புதிய தலைமை செயலாளர் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. இதற்கு அவர்கள் கைகாட்டுவது நகராட்சி நிர்வாக துறை செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா. 1989 தமிழ்நாடு கேடர் அதிகாரியான இவர், 30 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக அனுபவமிக்கவர் என்றும் தகவல்களை கசியவிட்டுள்ளனர். இதையும் மறுக்கும் வேறு சிலர், பதவிக்காலம் முடியும் வரை இறையன்பு மாற்றப்டமாட்டார், பதவிக்காலம் முடியும் காலத்தில் இதுபோன்ற தகவல்கள் உலா வருவது வழக்கமே என்றும் கூறுகின்றனர்.