பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்தாகிறது…? மத்திய அரசை பின்பற்றும் தமிழகம்…!
சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது போன்று, தமிழகத்திலும் மாநில பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்றும் இன்னமும் பரவி கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு லட்சத்தில் தான் பதிவாகி வருகிறது. தடுப்பூசி பற்றாக் குறைக்கு இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் கல்வி நிலையங்கள் ஓராண்டாகவே பாதிக்கப்பட்டு உள்ளது.
என்ன செய்வது என்று நீண்ட ஆலோசனைக்கு பின்னர் மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்பதை மையப்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் நிலை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒட்டிதான் தமிழக அரசின் நிலையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரத்து என்பதை தொடர்ந்து தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஆகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் நாளை பள்ளிக்கல்வித் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதன் முடிவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.