இதோ… கிடைச்சாச்சு சாவி…! வேலுமணி ரெய்டில் மகிழ்ந்த திமுக
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் அதி முக்கியமான லாக்கர் சாவி கிடைத்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திமுக முகாமை குஷியாக்கி இருக்கிறது.
கோவை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் காலை 6 மணிக்கு குலுங்க ஆரம்பித்தது. மாலை 6 மணி அளவில் ஒரளவு இந்த நகரங்கள் இயல்பு நிலைக்கு வந்ததாக கூறலாம்.
அதற்கு காரணம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோவை வீடு, அலுவலகங்கள், பங்குதாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக நடத்திய சோதனை தான்.
கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் வேலுமணி வீட்டில் சுமார் ஆறரை மணியளவில் சோதனை தொடங்கியது. ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள், கணினிகள், ஹார்டு டிஸ்குகள், பண பரிவர்த்தனை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளனர்.
இந்த சோதனையை அறிந்த கோவையில் உள்ள திமுக முகாம் சந்தோஷத்தில் இருக்கிறதாக கூறப்படுகிறது. அதற்கு ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்திருக்கின்றனர் கோவை திமுகவின் முக்கிய புள்ளிகள்.
அதாவது…. இந்த சோதனையின் போது முக்கியமான லாக்கர் சாவி ஒன்று கைப்பற்றப்பட்டு உள்ளதாம். அந்த லாக்கரில் பல முக்கியமான விவரங்கள் புதைந்து கிடப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்து திருமலைச்சாமி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவர் வேறு யாருமல்ல…. வேலுமணியின் அண்ணன் அன்பரசன் ஆலையில் பணிபுரிந்து வருகிறார். வருமானவரித்துறை தகவல் பேரில் காளியாபுரத்தில் அவரின் வீட்டிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். பல சோதனைகளிலும் கிடைத்த ஆவணங்கள் பற்றியும் அதிகாரிகள் தரப்பில் பல கட்டங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.