கொரோனாவால் சரவணா ஸ்டோர்ஸ்க்கு வந்த ‘நிலைமை’…!
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றாததால் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கிறது. ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகள், உணவகங்கள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கி அனுமதி தரப்பட்டு உள்ளது.
கடைகளின் முகப்பில் கிருமி நாசினி, உடல் வெப்பநிலை கருவி ஆகியவற்றை வைக்க வேண்டும், கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந் நிலையில், கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. அதுவும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் விதிகளை பின்பற்றப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.