பள்ளிகள் திறந்தாச்சு…. எத்தனை மணிக்கு வரணும் தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
மிகவும் நல்ல செய்தியாக தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் அனைத்து நிலைமைகளும் சரியாகி மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை என்பது இப்போதைக்கு இல்லை. அனைத்தும் கட்டுக்குள் வந்த பின்னர் அவர்கள் வருகை பற்றி தமிழக அரசு அறிவிக்கும் என்று தெரிகிறது.
ஆனால், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மட்டும் தருவிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட பொதுத்தேர்வுகளுக்கு மதிப்பெண் போட வேண்டும். அதற்காக அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சுழற்சி ஷிப்ட் முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி வேலை நாளான 6 நாளில், தலா 3 நாளில் 50 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும். இங்கு தான் ஒரு சிக்கல் எழுந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருப்பதால் பள்ளிக்கு வரமுடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
சொற்பமான ஆசிரியர்கள் மட்டுமே இப்போது பள்ளிக்கு வந்து சென்று கொண்டு இருக்கின்றனர். குறைவான ஆசிரியர்கள் வரவால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக ஒரு உத்தரவை போட்டுள்ளது.
அதாவது, இனி அனைத்து ஆசிரியர்கள் நாள்தோறும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பிறப்பித்து உள்ளது. உத்தரவை பின்பற்றி பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.