ரேஷனில் அடுத்த இலவசம்…? மொத்தம் 13 பொருட்கள்…!
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை ஜூன் 3ம் தேதி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் ஆரம்பம் முதலே படு ஸ்பீடாக இயங்கி வருகிறார். கொரோனா தொற்றை குறைப்பதில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் முழு வீச்சில் களம் இறங்கி இருக்கின்றனர்.
அதன் ஒரு கட்டமாக ரேஷனில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை இலவசமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இன்றைக்கு ஒரு ஒப்பந்தபுள்ளியை அறிவித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை, ஒரு கிலோ உப்பு, ஒரு கிலோ ரவை, சர்க்கரை 500 கிராம், உளுந்தம்பருப்பு 500 கிராம், புளி 250 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், ஒரு குளியல் சோப்பு, ஒரு துணி துவைக்கும் சோப்பு, மிளகு, சீரகம் என 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு உள்ளது.
13 பொருட்களும் வரும் ஜூன் 3ம் தேதி முதல் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவற்றை வழங்கி முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.