பிப். 26ல் பிரஸ் மீட்…? ரஜினியின் அடுத்த அறிவிப்பு…! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!
சென்னை: சென்னையில் வரும் 26ம் தேதி பிரஸ் மீட் நடத்த நடிகர் ரஜினிகாந்த் தயராகி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.
இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல… உயிரே போனாலும் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் போக மாட்டேன் என்று பேசிய நடிகர் ரஜினிகாந்த உடல்நிலை, கொரோனா என காரணம் சொல்லி கட்சி ஆரம்பிக்க போவது இல்லை அறிவித்தார். அவர் அறிவித்து நாட்கள் நகர்ந்தாலும் தலைவர் வருவார் என்று இன்னமும் அவரது ரசிகர்கள் காத்திருப்பது ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சியாக வரும் 26ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ரஜினிகாந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதாக பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலை அதற்காக ரஜினி தரப்பில் இருந்து புக் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நிர்வாகிகளை சந்தித்துவிட்டு மீட்டிங் ஹாலை புக் செய்ய சொல்லி இருக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஹால் புக் செய்வது இருக்கட்டும்? எதற்காக இந்த பிரஸ் மீட் இருக்கும் என்று இப்போது ரசிகர்கள் விதிர்விதிர்த்து போய் உள்ளனராம். மீண்டும் அரசியல் என்ட்ரி தொடர்பாகவா அல்லது எந்த கட்சிக்கு தமது ஆதரவு என்பதை அறிவிக்க இந்த ஏற்பாடா என்று பட்டிமன்றம் நடக்காத குறையாக ரசிகர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ரஜினி இப்போது தான் அரசியலுக்கு வரவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறார் என்று தமிழருவி மணியன் அண்மையில் கொளுத்தி போட்டு விட்டு போயிருக்கிறார். போதாத குறைக்கு கமலும் கடந்த 20ம் தேதி ரஜினி வீட்டுக்கே சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.
இவை அனைத்தையும் முடிச்சு போட்டு ரசிகர்களும் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்ற முடிவு செய்துள்ளாரா? எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை அறிவிக்க போகிறாரா என்பது அவருக்கே வெளிச்சம் என்கின்றனர் ரசிகர்களில் ஒரு தரப்பினர்….!