நீங்க பள்ளி ஆசிரியரா..? உங்க சம்பளத்தில் பாதி ‘கட்’..?
சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பாதியாக குறைப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் எதிரொலியாக தமிழகத்தில் 2020ம் ஆண்டு மார்ச் முதலே பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு சற்றே குறைய தொடங்கிய தருணத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொரோனா தாக்கியதால் பள்ளிகள் மூடப்பட்டன.
பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் இயங்காத நிலையில் சில ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று வந்தனர். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அதற்கு தேவையான ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தனர்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியர்கள் முழுமையான பணிக்காக பள்ளிகளுக்கு சென்று வரவில்லை. அவர்களுக்கான முழு ஊதியம், இன்ன பிற சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் இது மற்ற துறைகளில் உள்ளவர்களிடையே பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியது.
குறிப்பாக, காவல்துறையினர் தரப்பில் இது பெரும் பேசு பொருளாக மாறியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் 24 மணி நேரமும் ஓய்வின்றி முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். நாள் முழுக்க மழை, வெயில் என்று பாராமல் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறோம், எங்களுக்கு எவ்வித ஊதிய முன்னேற்றமும் இல்லை. 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்து அனைத்து சலுகைகளும் பள்ளி ஆசிரியர்கள் பெற்று வருகின்றனர் என்று இணையதளத்தில் பெரும் விவாதமே நடந்து வருகிறது.
இந் நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பாதியாக குறைப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
மாணவர்களை வாட்ஸ் அப் வழியாக தொடர்பு கொள்வதில் சிக்கல் நிலவி வருகிறது. ஆனாலும் அவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அலகு தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் காரணமாக பணியின்றி வீட்டில் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களின் சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எங்களிடம் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அவரின் அறிவுரைப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.