பள்ளி மாணவர்களுக்கு ‘இனிப்பான’ விஷயம்…! முதல்வரிடம் போன அறிக்கை
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.
தமிழகத்தை ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பார்கள்.. பழைய திட்டங்கள் பல வெவ்வேறு பெயர்களில் உருமாறி புது பொலிவு பெறும். அப்படி பொலிவு பெற்ற திட்டங்கள் பல உண்டு.
எந்த திட்டம் என்றால் மக்கள் மனதில் இன்றும் பாராட்டுகளை பெற்று வரும் திட்டம் மதிய உணவு திட்டம்தான். வறுமையும், பசியும் ஒரு மனிதனின் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என்ற உன்னத நோக்கில் கொண்டு வரப்பட்டது இந்த திட்டம்.
எந்த அரசு வந்தாலும்… இந்த திட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தி சிறப்பு செய்வார்கள். அப்படிப்பட்ட மதிய உணவு திட்டத்தில் சூப்பர் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது தமிழக அரசு.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனியார் பள்ளிகள் கட்டணத்தை 100 சதவீதம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் இதுகுறித்து தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாழை விவசாயிகள் துயர் துடைக்க மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முடிவு செய்துள்ளோம்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறோம். அதன் முடிவில் முதல்வர் அனைத்தையும் அறிவிப்பார் என்று கூறினார்.