வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்…! 3 நாட்கள் வீட்டில் தவித்த கொடுமை
சென்னை: ஊரெல்லாம் மழை, வெள்ளம்.. என்ற சூழலில் அதில் அமைச்சர் ஒருவரே சிக்கி 3 நாட்களாக கஷ்டப்பட்டு உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
தென்மாவட்டங்களை வெள்ளக்காடாக்கிய அதி கனமழை நின்றுவிட்ட போதிலும் அதன் பாதிப்பு இன்னமும் நிற்கவில்லை. சாலைகள் சேதம், வீடுகளில் தண்ணீர், குடியிருப்பு பகுதிகளில் சிக்கிய மக்கள் என தினம், தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்கள் கழித்து மீட்கப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
அப்போது, தனது வீட்டில் இருந்த தருணத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ளார். 3 நாட்களாக அந்த பகுதியில் மின் இணைப்பு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் அமைச்சர் மாட்டிக் கொண்ட விவரம் வெளியில் தெரியவில்லை.
தற்போது படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில், அமைச்சரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.