முன்பு ஓட்டல்..! இப்போ கொரோனா ஹாஸ்பிட்டல்...! தீப்பிடிக்க 9 பேர் பலி
விஜயவாடா: ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையமாக மாறிய ஓட்டல் தீப்பிடித்து எரிய 9 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திராவை பிடித்து ஆட்டு, ஆட்டு என்று ஆட்டுகிறது கொரோனா. நேற்று மட்டும் வரலாறு காணாத அளவாக ஒரே நாளில் 12000 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனாவால் இதுவரை 1,842 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர போதிய மருத்துவமனைகள் இல்லை. ஆகையால், அங்குள்ள ஓட்டல்கள், மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்கவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில், விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருந்தது.
அந்த மருத்துவமனையில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. உள்ளே அப்போது 22 பேர் நோயாளிகளாக தங்கி இருந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பதற்றம் அடைந்த அவர்கள் தப்பிக்க போராடினர்.
ஆனாலும் அவர்களில் 9 பேர் தீயில் கருகி பலியாகினர். மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. எனினும் இதுபற்றிய தீவிர விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும் என கூறப்படுகிறது.