அந்த ‘4’ முக்கிய ஆவணங்கள்…! எஸ்பி வேலுமணிக்கு நீடிக்கும் சிக்கல்…!
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் கேசிபி சந்திரசேகரின் நாமக்கல் நிறுவனம் ஒன்றில் 4 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள், வியாபார பங்குதாரர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக களத்தில் இறங்கி உள்ளது. வேலுமணிக்கு நெருக்கமானவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்களும் ரெய்டுக்கு தப்பவில்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி காட்டினாலும் நாமக்கல் பகுதியில் நடைபெற்ற ரெய்டு பற்றி தான் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் பேச்சாக இருக்கிறது. அங்கு 2 நாட்களாக சோதனை நடைபெற்றது.
வேலுமணிக்கு மிக நெருக்கமானவராக கருதப்படுபவர் சந்திரபிரகாஷ். கேசிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். இவருக்கு சொந்தமாக காங்கேயம் தாலுக்கா, பச்சாபாளையம் என்ற ஊராட்சியில் எம்சாண்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று இருக்கிறது.
இந்த நிறுவனத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை விடவில்லை. அனைத்து தரப்பினர் மத்தியிலும் சென்னை, காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களை பற்றி தான் பேச்சுகள், தகவல்கள் வெளியாகின.
ஆனால் நாமக்கல்லில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டை பற்றிய தகவல்களை பலரும் அறிந்திருக்கவில்லை. சந்திரசேகருக்கு சொந்தமானதாக கருதப்படும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
ராத்திரி வரை நடைபெற்ற இந்த ரெய்டில் 4 முக்கிய ஆவணங்கள் வசமாக சிக்கியிருக்கிறதாம். அந்த ஆவணங்கள் எஸ்பி வேலுமணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துமாம்.
இதுமட்டும் அல்லாது, ரெய்டு பற்றிய தகவல் எதுவும் முன்கூட்டியே மாவட்ட போலீசாருக்கும், உள்ளூர் போலீசாருக்கும் சொல்லப்படவே இல்லையாம். அதிரடியாக வந்து ரெய்டை நடத்தி முடித்திருக்கின்றனர்.
கோவை, சென்னை நகரங்களில் ரெய்டு விவகாரம் முன்கூட்டியே கசிந்ததால் இப்படி ரகசியம் காக்கப்பட்டதாம். கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ரெய்டு காரணமாக அப்பகுதியே பரபரப்பானது…!