கொரோனா 3வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கணுமா…? எய்ம்ஸ் புது மெசேஜ்
டெல்லி: அனைவரும் கொரோனா 3வது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமை வரலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.
நாடு முழுவதும் 2வது ஆண்டாக கொரோனா பற்றிய பேச்சுகள் தான் இன்னமும் ஓடி கொண்டிருக்கின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப தடுப்பூசிகள் பற்றாக்குறையும் எழுந்துள்ளது.
கொரோனா அலைகள் ஒன்று, இரண்டு என்று அறிவிக்கப்பட்டாலும், இப்போது 2வது அலை முடியும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது. 3வது அலைக்கு சாத்தியங்கள் உள்ளன, குழந்தைகள் பத்திரம், மருத்துவமனைகள் தயாராகுங்கள் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அலர்ட் கொடுக்கப்பட்டு விட்டது.
மாநில அரசுகளும் சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் அனைவரும் கொரோனா 3வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறி உள்ள விஷயங்கள் வருமாறு: நாட்டில் உருமாற்றம் அடைந்த கொரோனாவின் 2வது அலை வீரியமாக உள்ளது. ஆகையால் 2 டோஸ் தடுப்பூசி என்பதோடு நாம் நின்றுவிடக்கூடாது. 3வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம்.
3வது டோஸ் தற்போது ஆய்வில் உள்ளது. அனைத்து தரப்பினரும் முழு டோஸ்களை போட்ட பின்னர் இந்த பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை முக்கிய கட்டத்தில் உள்ளது.
விரைவில் அனைத்து சோதனைகளும் முடிந்துவிடும். இன்னும் சில வாரங்களிலோ அல்லது செப்டம்பர் மாதமோ குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் தென்படுகின்றன என்று கூறினார்.
எய்ம்ஸ் இயக்குநர் கருத்தை பார்க்கும் போது 3வது டோஸ் செலுத்துவது குறித்த அறிவிப்பு அனேகமாக செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்று தெரிகிறது.