சிவசங்கர் பாபா விவகாரம்..! முதலில் வெயிட்டிங்… கடைசியில் சேசிங்.. வெளிவராத தகவல்கள்…!
சென்னை: சாமியார் சிவசங்கர் பாபாவின் கைது நடவடிக்கைக்கு இடையூறுகள் வந்த போதும் கடைசி நேரத்தில் கிடைத்த சில முக்கிய ஆதாரங்களே போலீசின் கைது நடவடிக்கைக்கு காரணமாக இருந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் பள்ளிகள் பாலியல் வன்கொடுமை என்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதை காண முடிகிறது. தொடக்கத்தில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
அதன் பின்னர் இப்போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி பாலியல் சமாச்சாரம். அதன் நிறுவனரான சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள் குறித்து முன்னாள் மாணவிகள் அளித்த புகார்கள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. எப்படி நடந்தது? ஏன்? என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாகவும் விவாதிக்கப்பட்டன.
ஆனால் தொடக்கத்தில் சிவசங்கர் பாபா விவகாரம் ஆளும்கட்சியை பெரிதாக அசைக்கவில்லை என்றும் அதன் பின்னர் நடந்த சில சம்பவங்கள் கைதை நோக்கி நகர்த்திவிட்ட தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன.
சிவசங்கர் பாபாவுடன் இருந்த அவருக்கு நம்பகமான ஒருவர் மூலமாக அவரின் ஏடாகூட வீடியோ காவல்துறையின் மேல்மட்டத்துக்கு எப்படியோ சென்றிருக்கிறது. பாபாவின் நம்பத்தகுந்த நபர், சிவசங்கர் பாபாவின் செயல்பாடுகளை அப்பட்டமாக அதில் தொகுத்து அனுப்பி இருந்திருக்கிறார்.
மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், சிஷ்யகோடிகள் என பலரும் அந்த வீடியோவில் உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர கையில் மது, மடியில் மாணவிகள் என ஏடாகூடமாக இருப்பது போன்ற காட்சிகளும் காவல்துறை மேலிடத்துக்கு முதலில் சென்றதாக தெரிகிறது.
தொடக்கத்தில் அது பற்றிய நடவடிக்கைகளோ எடுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவசங்கர் பாபாவின் மீது குற்றச்சாட்டுகளும், புகார்களும் பெருக… அவருக்கு ஆதரவாக பல முக்கிய புள்ளிகள் உயரதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் வாய்ஸ் கொடுத்திருந்ததாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆட்சியில் வந்து முழுதாய் இப்போதுதான் 1 மாதம் கடந்திருக்கிறது… அதற்குள் இப்படிப்பட்ட வேகமான நடவடிக்கை தேவையா..? இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இது வலுசேர்க்கும், சிவசங்கர் பாபா கைது வேண்டாமே என்கிற பாணியில் மெசேஜ்கள் பாசாகி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு தரப்பினரோ…கலப்பு திருமணங்களை நடத்தியவர், ஆன்மிக வழியில் திராவிட கொள்கையை பரப்பி கொண்டிருக்கிறார் என்று முக்கிய பிரமுகர்கள் வழியாக கைதை தவிர்க்க முயன்றதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் தான் தொடக்கத்தில் கைது அவசியமா என்ற பாணியில் பேசப்பட்டதாகவும், பல்வேறு காலங்களில் சிவசங்கர் பாபாவின் அந்தரங்க வீடியோக்களை ஆய்ந்து அவை உண்மையே, இனியும் வெயிட்டிங் வேண்டாமே என்றும் காவல்துறை சீனியர்ஸ் ஆட்சி மேலிடத்துக்கு நோட் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இனியும் தாமதம் வேண்டாம் என்று யோசித்து அதன்பிறகு தான் க்ரீன் சிக்னல் எரிய… உடனடியாக வழக்கு சிபிசிஐடி மாற்றம், தனிப்படைகள் உத்தரகாண்ட் பயணம், டெல்லி வரை சேசிங் என காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன.
வழக்கு விசாரணையை வேகப்படுத்த உயரதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதை மட்டுப்படுத்த முடியுமா என்று பக்தகோடிகள் தரப்பில் முயற்சிகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும், காவல்துறையின் அதி தீவிர நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதை மறுக்க முடியாது….!