Sunday, May 04 12:22 pm

Breaking News

Trending News :

no image

இல்லத்தரசிகள் தலையில் அதிகாலை ‘இடி’..! சமையல் கேஸ் விலை எவ்வளவு தெரியுமா…?


டெல்லி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை முன் வைத்து மாதத்தில் 2 முறை சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், அந்த மாதத்தின் 15ம் தேதியும் இந்த விலை மாற்றி அமைக்கப்படும்.

இன்றைக்கு ஜூலை 1ம் தேதி… இந்த மாதத்தின் முதல் நாள்… ஆனால் இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மானிய விலையில் 825 ரூபாய் கொடுத்து வாங்கும் சிலிண்டரை இனி 850 ரூபாய் கொடுத்தால் தான் பெறமுடியும். இந்த கேஸ் விலை உயர்வை அறிந்த இல்லத்தரசிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து ஷாக் தந்து வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயை நோக்கி நெருங்கி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் கேஸ் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதிக்கும். அதே நேரத்தில் 3 மாதங்கள் கழித்து, அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்கள் கழித்து இப்போது தான் சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Most Popular