அப்பாடா…! தேமுதிக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
சென்னை: கடந்த 2 நாட்களாக பெரும் கவலையில் இருந்த தேமுதிக தொண்டர்களுக்கு இனிப்பாக செய்தி கிடைத்திருக்கிறது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அறியப்பட்ட தேமுதிக நிலைமை இப்போது அதலபாதாளத்தில் உள்ளது. டக்சென்று மேலே எழுந்த கட்சி, யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிந்தது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் சரியான கூட்டணியை தேர்வு செய்யாமல் சொதப்பி… படு தோல்வியை சந்தித்து இருக்கிறது.
அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்கலாம் என்று பேச்சுகள் 2 வாரங்களாக ஓடி கொண்டு இருக்கிறது. அரசியல் கால சூழல் இப்படி போய் கொண்டிருக்க தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சி செய்தி 2 நாட்களுக்கு முன்பாக கிடைத்தது.
கட்சியின் தலைவரான விஜயகாந்த், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். வெளிநாடு சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பினார்.
அதன் பின்னர் கொரோனா தாக்க… சிகிச்சைகள் தொடர்ந்தன. எழுந்து சரியாக நடக்க முடியாத சூழலில் அவர் இருப்பதை கண்டு தொண்டர்கள் கலங்கி போகினர். இப்போது மீண்டும் மருத்துவமனையில் அட்மிட்டா என்று கலங்கி போயினர்.
ஆனால் விஜயகாந்த் மருத்துவமனையில் அட்மிட்டாக வில்லை, தமது வழக்கமான பரிசோதனைகளுக்காக தான் மருத்துவமனைக்கு வந்தார். தற்போது நேற்றிரவு 11 மணி அளவில் வீடு திரும்பிவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கும் தகவல் அவரது தொண்டர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையறிந்த தொண்டர்கள் கவலையில் இருந்து விடுபட்டனர். விரைவில் அவர் முன்பு போல எழுந்து வர வேண்டும் என்பது அவர்களின் பிரார்த்தனைகளாகவும் உள்ளது.