நாளை புயல்…! பள்ளிகளுக்கு லீவா..?
சென்னை: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னமும் மழை ஓய்ந்தபாடில்லை. சென்னை, கடலூர், கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மழை ஒரு பக்கம் பெய்து வெள்ள நீர் மறுபக்கம் வடிந்துவிட்டாலும் அது தொடர்பான எதிர்க்கட்சிகளின் அரசியல் வடியவில்லை.
இந் நிலையில், நாளை வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
தெற்கு அந்தமான் கடல். அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். பின்னர் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வெள்ளி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் சில பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 6 நாட்களுக்கு இந்த மழை இருக்கும் என்றும் கூறி உள்ளது.
நாளை புயல் உருவாகக்கூடும் என்ற அறிவிப்பால் கல்வி நிறுவனங்கள் இயங்குமா? என்பது குறித்த சந்தேகம் பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. விடிய, விடிய மழை பெய்து அதன் பின்னர் அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகும் முன்னரே, உரிய நேரத்தில் அறிவிவிப்பு வெளியிடப்பட்டால் ஏதுவாக இருக்கும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது என்பதே அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்படும் விளக்கமாக இருக்கிறது.