ஆட விட்டு பாக்குறீங்களா ஸ்டாலின்..? காங். போட்ட ‘அண்ணாமலை’ குண்டு
சென்னை: அண்ணாமலைக்கு ஒரு நியாயம், தினகரனுக்கு ஒரு நியாயமா? அண்ணாமலையை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா? என்று காங்கிரசில் இருந்து எழுந்துள்ள எதிர்ப்பு குரல் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே அம்மாநில பாஜக அரசு புதிய அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
கர்நாடக பாஜக அரசை கண்டித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று தஞ்சையில் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக அரசை எதிர்த்து பாஜகவே போராட்டமா? அதுவும் மாநில தலைவர் நடத்தும் போராட்டமா? என்று கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன. இந்த போராட்டம் தொடர்பாக கொரோனா விதிகளை மீறியதாக போலீசார் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந் நிலையில், அண்ணாமலைக்கு ஒரு நியாயம், தினகரனுக்கு ஒரு நியாயமா? அண்ணாமலையை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா? என்று ஸ்டாலினுக்கு எதிராக காங்கிரசில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
தமிழக காங். பொது செயலாளர், செய்தி தொடர்பாளர் ஜி.கே. முரளிதரன் இந்த எதிர்ப்பு குரலை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தமது பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள கண்டன பதிவில் கூறி உள்ளதாவது:
கிட்டத்தட்ட ஒரு வாரக் காலமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றை விரட்ட பொதுமக்கள் கூடும் ஒவ்வொரு இடங்களாகப் பார்த்துப் பார்த்து மாஸ்க் அணியாதவர்களை திட்டி, கண்டிப்புக்காட்டி, கெஞ்சி, வேண்டுகோள் வைத்து, அரசு உத்தரவை நிறைவேற்ற ஒரு அதிகாரி எப்படி செயல்படுவாரோ அதைவிட நூறு மடங்கு தீவிரமாகச் செயல்பட்டு பஸ்ஸிலும், ஆட்டோவிலும், சந்தைகளிலும், மாஸ்க் போடாதவர்களுக்கு கையோடு கொண்டுவந்த மாஸ்க்கை மாட்டச் சொல்லிக் கொடுத்ததை எல்லா காட்சி ஊடகங்களும் தொடர்ந்து காட்டியதை எல்லோரும் பார்த்தோம்.
அமமுகவின் பொதுச் செயலாளர் தினகரன் கர்நாடக பாஜக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து நடத்தப்போவதாக அறிவித்த உண்ணாவிரதத்தை அரசு கொரோனா பரவாமலிருக்க போட்டிருந்த தடை உத்தரவை மதித்து தள்ளிவைத்து விட்டார்.
தமிழகத்திலேயே அமமுக கொஞ்சம் கூடுதலாக சதைப்பிடிப்புள்ள பகுதி தஞ்சைத்தரணி. அவரே மக்கள் நலனை முன்னிறுத்தி போராட்டத்தை தள்ளி வைத்துவிட்டார்.
ஆனால், ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரியாக மக்கள் பணியாற்றிய ‘ப்ரௌவ்டு கன்னடீகா’அண்ணாமலை அரசு உத்தரவை காற்றில் தூக்கி கடாசிவிட்டு உண்ணாவிரத கோஷத்தோடு ஊரைக் கெடுக்க உட்கார்ந்துவிட்டார்.
அவரை அலங்கரிக்க, பல்லக்கில் தூக்கி பவிசாக்க, பதவிக்காக, மாஸ்க் அணியாமலும் சிலர் அணிந்தும் நோய் பரப்பும் ரோபோக்களாக வருவதும் போவதுமாக இருந்ததை காணொலி ஊடகங்களில் கண்டோம். வெகுண்டோம்.
கர்நாடகாவில் அணை கட்டுவதை தடுக்க உண்மையிலேயே இவர்கள் நினைத்தால் கர்நாடகாவில் ஆளும் அவர்கள் கட்சி முதல்வர் பொம்மையை நேரில் சந்தித்து சொல்லலாம். அவர்கள் கேட்கவில்லை என்றால் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் செய்யலாம்.
அதை விட்டுவிட்டு மேகதாது அணைக்கட்டை தடுப்பதாக நாடகமாடி, தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கப் போராடிக் கட்டிய நோய்த் தடுப்பணையை அல்லவா உடைக்கிறார்கள். என்னுடைய வருத்தமெல்லாம் அண்ணாமலைக்கு ஒரு நியாயம், தினகரனுக்கு ஒரு நியாயம் என்று ஆடவிட்டு வேடிக்கை பார்த்த தமிழக அரசின் மீதுதான்.
பாஜகவை உண்ணாவிரதம் இருக்க இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அனுமதித்ததே அரசு செய்த இமாலயத் தவறு என்கிறார்கள் தஞ்சைத்தரணி வேளாண் பெருமக்கள்.
திமுக என்னதான் வளைந்து கொடுத்து பாஜகவோடு இணக்கமாய் போக முயற்சி செய்தாலும் அவர்களைப் பொறுத்தவரை திமுக என்றாலே ஹிந்து ஜென்ம விரோதி. பாசப்பார்வை பார்க்கவே மாட்டார்கள். எனவே மத்திய மண்டூகங்களோடு மஞ்சள் குளிக்கலாம் என்று மனப்பால் குடித்து மதிப்பிழந்து விடாதீர்கள் என்று உண்மையான தோழமைக்கட்சி காரனாக உரிமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .
இனியாவது தளபதி ஸ்டாலினின் தமிழக அரசு இப்படிப்பட்ட இம்சை அரசர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று தஞ்சைத்தரணி மக்கள் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று காட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.