இவரே… இனி இந்தியாவின் ஜனாதிபதி…! குவியும் வாழ்த்துகள்
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசா பழங்குடியின தலைவர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். பதிவான அனைத்து வாக்குகளும் டெல்லியில் வைத்து எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி. மோடி மேற்பார்வையிட்டார்.
திரௌபதி முர்முவுக்கு 2824 வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனாதிபதியாக வேண்டும் என்றால் 5,28,491 மதிப்பு வாக்குகள் போதும. ஆனால் முர்மு 6,76,803 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
முர்மு வெற்றியை தொடர்ந்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.