பஸ் கட்டணம் உயருகிறதா…? அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேட்டி…
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்பதற்கு போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்து இருக்கிறார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை எங்கோ போய் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் சதம் அடித்து ஆட்டம் காட்டுகிறது. தமிழகத்தின் பல நகரங்களிலும் பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் வரியால் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா கூடுதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் 27 மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள போக்குவரத்து பயன்பாடு குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி இருப்பதாவது:
27 மாவட்டங்களில் 22 லட்சம் பேர் பயணித்துள்ளனர். ஒவ்வொரு பேருந்துகளிலும், வெவ்வேறு திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது. டவுன் பஸ்களில் புதிய வண்ணம் அடிக்கும் திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
கூடுதலாக 500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள், 2000 டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் தமிழகத்தில் உயர்த்தப்படாது. 6262 சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.