கக்காவுக்கு காரணம் காக்கா..? மேட்டர் ஓவர்
காஞ்சிபுரம்; பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட வில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருவந்தவார் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. மலம் கலக்கப்பட்டது போன்ற நாற்றம் வந்ததாக மாணவர்கள் கூற ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
இதையறிந்த தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக மதிய உணவு வழங்குவதை நிறுத்தி உத்தரவிட்டார். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக தகவல் பரவ ஊர் முழுவதும் பரபரப்பு நிலவியது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். என்ன நடந்தது என்பது குறித்து தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
இது குறித்து அவர் கூறியதாவது; பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தப்பட்டது. அழுகிய முட்டையை காகம் கொண்டு தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளது. தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை, இது தொடர்பாக வெளியான தகவல்கள் தவறு என்று தெரிவித்துள்ளார்.