போலாம்… ரைட்…! தமிழகத்தில் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்…?
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிப்புகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருகிறது. கடுமையாக ஊரடங்கு காரணமாக பாதிப்புகள் சரிந்துள்ளதால் தொற்றுகள் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டீக்கடைகள், மளிகை கடைகள், மதுக்கடைகள் என கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல,மெல்ல திரும்பி வருகிறது. ஆனால், பேருந்து போக்குவரத்து இயங்க இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான பணியாளர்கள் ஆட்டோ, டாக்சிகளை பயன்படுத்துவதால் பொருளாதார சிக்கலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அப்போது பாதிப்பு குறைந்துள்ள27 மாவட்டங்களில் பேருந்து சேவையை தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பேருந்துகளை பராமரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எந்த நேரத்திலும் தமிழக அரசிடம் இருந்து அனுமதி வரும் என்பதால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.