கொரோனாவுக்காக அதிமுக செய்த ‘மாஸ்’…!
சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக 1 கோடி ரூபாய் வழங்கி அசத்தி உள்ளது.
தமிழக அரசானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாக இறங்கி உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்க தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந் நிலையில், கொரோன தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். மேலும், அதிமுக எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் ஒரு மாத ஊதியமும் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
அதிமுக தொண்டர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு கொடைக்கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழி நின்று மக்களின் துன்பம் துடைத்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எம்.ஜி.ஆரின் கொள்கை வழி நின்று நிவாரணப் பணிகளில் அக்கறை கொள்ளுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.