உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்…! முதல்வர் ஸ்டாலின் திடீர் வீடியோ…!
சென்னை: அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நீங்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது: முழு ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே, 14 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
14 நாள்கள் அனைவரும் வீட்டில் இருந்தால், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம். ஊரடங்கில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றுப் பரவலை குறைத்துவிடலாம். எனவே முழு ஊரடங்கை பின்பற்றுங்கள். வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். சத்தான உணவுகளை உண்ணுங்கள்.
2 வாரங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்தால் அது மிகவும் சவாலாகி விடும். கொரோனா 2வது அலை மிக மோசமாக உள்ளது. இது கஷ்டமான காலம்தான், ஆனால் கடக்க முடியாத காரியமல்ல.
நேற்று நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அந்த வகையில் கொரனோ பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் அடைந்துள்ளது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நீங்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.