தடய அறிவியல் துறை பணி…! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தடய அறிவியல் துறை பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் 14ம் தேதி கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வுக்கு முறையே முதல்கட்ட மற்றும் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள விண்ணப்பதாரர்கள் 7ம் தேதி (நாளை) முதல் 14ம் தேதி அன்று மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில், தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ‘ஸ்கேன்’ செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவர்களுக்கு இந்த தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை என கூறி, அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த குறிப்பாணை மற்றும் அரசு இ-சேவை மையங்களின் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.