இன்று மார்கழி சனிக்கிழமை…! எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் எடப்பாடியார்…!
சேலம்: எடப்பாடி தொகுதியில் இருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசியல் களமானது எதிர்பார்த்ததை போலவே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுக்க தொடங்கி இருக்கின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் மூலமும், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மூலமும் தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் தமது பிரச்சாரத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். போகிற பக்கங்களில் எல்லாம் அதிமுக பற்றியும், தமிழக அரசை பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந் நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவும் தமது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறது. தமது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
எடப்பாடிக்கு உட்பட்ட பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு அவர் தமது தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுக்கிறார். மார்கழி மாதமான சனிக்கிழமை பஞ்சமி திதியான இன்று தமது பிரச்சாரத்தை தொடங்கும் முழுவீச்சில் மாநிலம் முழுக்க பயணிக்க உள்ளார். முதல் முறையாக முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.