நடிகர் சூர்யா ரூ.1 கோடி...! நீங்க எவ்வளவு கொடுத்தீங்க ராஜூ பாய்…?
சென்னை: பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா கொரோனா நிவாரண நிதியாக எத்தனை ரூபாய் கொடுத்துள்ளார் என்று இயக்குனர் ஜான் மகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை போட்டு தாக்கி வருகிறது. பாதிக்கப்படும் மக்களுக்காக மருத்துவ வசதி, தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் என நிறைய நிதி தமிழக அரசுக்கு தேவைப்படுகிறது.
தமிழக அரசுடன் அனைவரும் கைகோர்த்து கொரோனா எதிர்ப்பு பணியில் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம், நிதி தாருங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அவரின் அழைப்பையும், வேண்டுகோளையும் செவிமடுத்த நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி அளித்துள்ளனர். கடந்தாண்டு இவர்கள் ரூ. 1 கோடி அளித்து அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்களின் சேவையை தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாராட்டி வருகின்றனர்.
அவரை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந் நிலையில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா எத்தனை ரூபாய் நிதியாக தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறார் என்று கேள்வி பலமாக எழுந்துள்ளது.
பிரபல இயக்குநர் ஜான் மகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: இந்துக்கள் மனதை புண்படுத்துறாங்கன்னு நீங்க சொன்ன சூர்யா ஒரு கோடி கொடுத்திருக்காரு, நீங்க என்ன கொடுத்தீங்க ராஜு பாய்? என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது. எந்த விஷயம் என்றாலும் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவர்களை தாக்கி பேசும் ஹெச் ராஜா நிதி தருவாரா? அவர் ஏன் தரப்போகிறார் என்று டுவிட்டரை பார்த்து பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த நெத்தியடி கேள்வி எழுப்பியுள்ள ஜான் மகேந்திரன் வேறு யாருமல்ல. நடிகர் விஜய்யை வைத்து சச்சின் படத்தை இயக்கியவர். பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.