சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவரா..? பொதுத் தேர்வு பற்றி அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு….!
டெல்லி: கொரோனா காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும் தொற்று பாதிப்பு இன்னமும் லட்சத்தில் தான் நாள்தோறும் பரவி வருகிறது.
அந்தந்த மாநில அரசுகள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா? இல்லையா? என்ற பெருங்குழப்பம் நிலவி வந்தது. ஜூலை மாதம் தேர்வு என்றும் பேச்சுகள் எழுந்து வந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந் நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இன்று மாலை கல்வித்துறை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்கு பின்னர் இந்த ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்த குழப்பங்களுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறி உள்ளார். மாணவர்களுக்கு சிறப்பான முறையில் வழிகாட்டு முறைகளுடன் மதிப்பெண்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மாணவர்களின் உடல்நலனே முக்கியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரத்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா, இல்லையா என்பது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.