3 வருஷசத்துல நான் பண்ணியது இதுதான்...! பணி பட்டியலை வெளியிட்ட ஜனாதிபதி
டெல்லி: ஜனாதிபதியாக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்று, 3 ஆண்டுகள் நிறைவடைய, அவர் மேற்கொண்ட பணிகள் என்ன என்ற விபரங்களை, ஜனாதிபதி மாளிகை வரைபடங்களுடன் வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:ஜனாதிபதி இதுவரை, ராணுவத்தினர், விஞ்ஞானிகள் உட்பட, 7,000 பேரை சந்தித்துள்ளார். கொரோனா நிவாரண உதவிக்கான 'பி.எம்-கேர்ஸ்' நிதியத்திற்கு, ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்.அத்துடன், ஓராண்டு வரை, ஊதியத்தில், 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில், செலவுகள் குறைக்கப்பட்டு, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த், 2019 ஜூலை - நடப்பு ஜூலை வரை, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட, ஒன்பது நாடுகளின் அதிபர்களை வரவேற்று, விருந்தளித்துள்ளார்.
5 கண்டங்களைச் சேர்ந்த, உலகத் தலைவர்கள், 15 பேரையும், 28 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், துணை துாதர்களையும் வரவேற்று உபசரித்து உள்ளார்.ஜனாதிபதி மாளிகை வரலாற்றில், முதன் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, விருதுகள் வழங்கப்பட்டன. கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்களின், 50வது மாநாட்டை நடத்தினார்.
தினமும், ராணுவத்தினர் முதல் விஞ்ஞானிகள் வரை; விவசாயிகள் முதல் தீயணைப்பு வீரர்கள் வரை, சராசரியாக, 20 பேரை, ஜனாதிபதி சந்தித்தார். புதுச்சேரி பல்கலை, சிக்கிம் பல்கலை உள்ளிட்ட கல்வி மையங்களின், பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி ஒன்பது முறை பங்கேற்றுள்ளார்.
ஜனாதிபதி, மத்திய அரசின், 48 சட்டங்கள், மாநில அரசுகளின், 22 சட்டங்கள், 13 அவசர சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.11 கவர்னர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தகவல் ஆணையர், லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரை நியமித்துள்ளார்.
19 மாநிலங்களுக்கும், நான்கு யூனியன் பிரதேசங்களுக்கும் சென்றுள்ளார். பெனின், காம்பியா, கினியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு, முதன் முதலாக சென்ற ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ளார். கடந்த, 2019 ஜூலை, 25 முதல் இதுவரை, ஜனாதிபதி மாளிகையை, ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 292 பேர் பார்வையிட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரில் உள்ள சினார் போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, முப்படை தினங்களில் பங்கேற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.