அதானி நாடு…! பாஜகவுக்கு ‘அல்லு’விட்ட ராகுல்
டெல்லி: அதானி நாடு என்று தமது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டு அதகளப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரை அவதூறு செய்தார் என்று ராகுல் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்படியே அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து, அரசு பங்களாவை காலி பண்ணுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்படி நாலாபுறமும் நெருக்கடிகள் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ராகுலுக்கு ஆதரவு அளித்து வருகின்றன, மத்திய அரசை காய்ச்சி எடுத்து வருகின்றன. நிலைமை முழுக்க, முழுக்க காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும் சாதகமாக இருக்கும் சூழல் மத்திய அமைச்சர்கள், பாஜக செய்தி தொடர்பாளர்கள் அரசின் நடவடிக்கை சரியே என்று கூறி உள்ளனர்.
இந் நிலையில், டுவிட்டர் பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டு அதகளம் பண்ணி இருக்கிறார். இந்தியில் வெளியிட்டு உள்ள அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:
அதானி மீதான தாக்குதல் நாட்டின் மீதான தாக்குதல் என்று பாஜக கூறுகிறது. அவர்களுக்கு நாடு என்றால் அதானி, அதானி என்றால் நாடு.
அதிலும், அதானியை காப்பாற்ற பிரதமர் ஏன் தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறார்? என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் ராகுல் காந்தி.
அவரின் டுவிட்டர் பதிவை பலரும் ரிவீட் செய்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். ராகுல் காந்திக்கான ஆதரவும் பெருகி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.