பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…? குழம்பி தவிக்கும் பெற்றோர்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒருநாள் தனியார் பள்ளிகள் இயங்குமா என்பது தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
3 நாட்களாக என்ன நடக்குது என்று தெரியாமல் இருந்த நிலையில் கனியாமூர் கலவரம் நேற்று பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது. பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான மரணம் பல கேள்விகளை எழுப்பினாலும், உரிய பொறுப்பேற்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நீதி கோரி மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
எங்கிருந்து அத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியாத அளவுக்கு நேற்று காலை 9.30 மணியளவில் பெரும் கூட்டம் கூடியது. அப்போது தொடங்கிய கலவரத்தில் பள்ளி பேருந்துகள், உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பள்ளி மாணவர்கள் ஆவணங்கள், காவல்துறை வாகனம் தீ வைப்பு என ரணகளமானது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் இவ்வளவு பெரிய கலவரம் எப்படி உருவானது? யார் ஒருங்கிணைத்தது என்று ஒருபக்கம் விசாரணை தொடங்கி உள்ளது. வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்து கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது முதல்கட்டமாக தெரிய வந்திருக்கிறது.
கலவரம் பற்றிய நிலவரம் இப்படி இருக்க… தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வெளியிட்டு உள்ள அறிக்கை பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கனியாமூர் கலவரத்தை கண்டித்து இன்று ஒருநாள் தனியார் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இயங்காது என்று கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம், எஸ்பியிடம் தனியார் பள்ளிகள் மனு அளிக்க உள்ளனர் என்றும் கூறி உள்ளனர். ஆனால் பள்ளிகள் இன்று கட்டாயம் இயங்க வேண்டும், விடுமுறை விடக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள் இன்று இயங்குமா? இல்லையா? என்பது தெரியாததால் பெற்றோர்கள் தரப்பில் கடும் குழப்பம் உருவாகி உள்ளது.