டுவிஸ்ட்…! அழகிரி, ஸ்டாலின் மீட்டிங் கேன்சல்..! கட்சியினர் கூறும் ‘அந்த’ காரணம்…!
மதுரை: மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அழகிரி சந்திப்பு கடைசி நொடியில் நடக்காமல் போயிருப்பதன் பின்னணியில் பல முக்கிய தகவல்களை கட்சியினர் கசிய விட்டுள்ளனர்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மதுரைக்கு நேற்று வந்துள்ளார் ஸ்டாலின். ஏர்போர்ட்டில் இருந்து அவர் காரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு தங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மதுரை பயணத்தில் அண்ணன் அழகிரியை சந்திப்பார்,அவரது வீட்டுக்கு செல்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நடந்த கதையே வேறு. இருவர் இடையே சந்திப்பு நடக்கவில்லை.
இன்று காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கான அரசு வேலைக்கான உத்தரவுகளை வழங்கினார். பின்னர் ஆய்வுக்கூட்டம், தோப்பூர் அருகே உள்ள கொரோனா சிகிச்சை மையம் திறப்பு என்று படுபிசியாக இருந்தவர், அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக முடித்துவிட்டு, திருச்சிக்கு பயணமானார்.
அண்ணன் அழகிரியுடன் சந்திப்பே நடக்கவே இல்லை. ஆனால் இருவரும் போனில் பேசிக் கொண்டதாக கட்சியினர் கூறி உள்ளனர். இன்று நாள் சரியில்லை என்று அழகிரி எடுத்துக் கூறியதால் சந்திப்பை ஸ்டாலின் தவிர்த்து விட்டதாகவும், வரும் 3ம் தேதி தலைவர் பிறந்த நாளில் இருவரும் ஒன்று சேர்ந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சகோதரர்களின் இணைப்பு, சந்திப்பு பெரும் பேசு பொருளாகவும், பெரிய அளவிலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் ஜூன் 3ம் தேதியை இருவரும் டிக் அடித்துள்ளதாகவும் விவரம் தெரிந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆக மொத்தம் அழகிரி, ஸ்டாலின் சந்திப்பு ரத்து இல்லை, சற்றே தள்ளிதான் போயிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.