தமிழகத்தில் கொரோனா போய்விட்டதா…? சுகாதாரத்துறை சொல்வது என்ன..?
சென்னை: தமிழகத்தில் பரிசோதனை செய்து கொள்ளும் 100 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையின் 8ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கேரளா, மகாராஷ்டிராவில் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகிறது. தமிழகத்தில் 100 பேர் சோதனை செய்து கொண்டால் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. தொடர்ந்து பாதிப்பு இருப்பதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 14 லட்சம் பேர் மீது 13 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் எங்கிருந்து பாதிப்பு வருகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.